சமுத்திரராஜனது யோசனைப்படி ராமர் சமுத்திரத்தின் குறுக்கே அணையிட எண்ணி, மரம் கல் முதலியவைகளைக் கொண்டு வந்து சமுத்திரத்தில் போடும்படி எல்லா வானரர்களையும், அவைகளைச் சேர்த்து அணையாக்கும்படி நளன் என்ற வானர ஸ்ரேஷ்டனையும் ஏவினார். அவ்வாறே வானரர்கள் யாவரும் சேர்ந்து வேலை செய்து, நளன் சமுத்திரராஜன் ஆகிய இவர்களது சகாயத்தால் இலங்கை வரை ஐந்து நாளில் அணைபோட்டு முடித்தனர். அதன்பின்பு வானரர்களில் அநேகர் அணைவழியாகவும், சிலர் அணையின் ஓரமாய்த் தண்ணீரில் நீந்திக் கொண்டும், சிலர் ஆகாய மார்க்கமாகவும் அவரவர்களுக்குத் தோன்றியபடி உற்சாகமாய் இலங்கை வந்து சேர்ந்தனர். ராமர் ஹனுமார் மேலும், லக்ஷ்மணர் அங்கதன் மேலும் ஏறிக்கொண்டு, இலங்கை வந்து சேர்ந்தார்கள். இலங்கை வந்ததும், சுக்ரீவனும் ராமரும் தமது சேனைகளை சாஸ்திரப்படி அணிவகுத்து நிறுத்தினர்.


This free site is ad-supported. Learn more